மக்களே ரெடியா இருங்க..! நாளை பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக அரசு ஜனவரி 1-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ‘அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதன் மூலம் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே, பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வருகிற ஜனவரி 8 ஆம் தேதி நாளை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார். அன்றிலிருந்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
முன்னதாக இந்த பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று மாநிலம் முழுவதும் தொடங்கியது. டோக்கன்களை நாளை (ஜன 7) ஆம் தேதிக்குள் கொடுத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நியாயவிலைக் கடை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களிடம் டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கரும்பும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


