சதுரகிரி வனப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி இல்லை . அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதோசம், அமாவாசை நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
இந்த சூழலில் பிரதோசம், அமாவாசையை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சதுரகிரி வனப்பகுதி காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு தொடரும் பட்சத்தில் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.