"வெள்ள பாதிப்பில்லா சென்னை... இது திராவிட மாடல் சாதனை!" – ஆயிரம் விளக்கு பகுதியில் முதல்வர் பெருமிதம்...!

 
1

சென்னையில் மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை வரை திறந்த வாகனத்தில்
வாக்கு சேகரித்தார்.

மயிலாப்பூர் வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து பேசும்போது, "நான் தமிழ்நாடு முழுவதும் சுற்றி முடித்துவிட்டு, இறுதியாக ஓசூர் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, இப்போது உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வரும்போது, ஒன்றை தெளிவாக நான் தெரிந்து கொண்டேன். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு ஆதரவு தந்து மாபெரும் வெற்றியைத் தருவதற்கு ‘OK’ சொல்லி விட்டார்கள்.

மயிலாப்பூர் தொகுதியில் வேலு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எப்படி ம் பணியாற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் பணியாற்றியதை கண்டு நானே பல நேரங்களில் பார்த்து பாராட்டி இருக்கிறேன், வியந்து இருக்கிறேன். அதனால்தான் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்து, வேட்பாளராக நிறுத்தி இருக்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் எழிலனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "ஆயிரம் விளக்கு என்பது என்னுடைய தொகுதி. பலமுறை என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்த தொகுதி. இப்போது உங்களிடத்தில் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். இங்கே டாக்டர் எழிலன் மீண்டும் நிற்கிறார். ஏற்கனவே அவரை தேர்ந்தெடுத்து 5 வருடமாக அவர் ஆற்றிய பணிகளை நீங்கள் நேரடியாக பார்த்திருக்கிறீர்கள்.

முன்பு இந்த தாமஸ் ரோடு எப்படி இருந்தது? மழை வந்தால் முதலில் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பாதிப்பு இருக்கிறதா? இல்லை. அதற்கு காரணம் திமுக ஆட்சி. நான் முதலமைச்சராக இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன பணிகள் எல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால், இன்றைக்கு மழை வருவதும் தெரியவில்லை; போவதும் தெரியவில்லை. ஏனென்றால், மழை நீர் எங்கேயும் தேங்குவதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் நான் பொதுக்கூட்ட மேடையில் பேசிதான் ஓட்டு கேட்டேன். ஆனால், சென்னையில் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தெருத் தெருவாக சென்று, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கப் போகிறேன். காரணம், சென்னை மாவட்டம், என்னுடைய மாவட்டம். கடந்த தேர்தலைப் போன்று வரும் தேர்தலிலும் டாக்டர் எழிலனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

தியாகராய நகர் தொகுதி வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து பேசும் பொழுது, "நான் சென்ற இடமெல்லாம் ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். அது என்னவென்றால், நீங்கள்தான் மீண்டும் முதலமைச்சராக வரப் போகிறீர்கள் என்ற உறுதியை அளித்துள்ளனர்.

இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறப்பட்டதில், பாதி டெல்லியை ‘Close‘ செய்துவிட்டோம். அந்தக் கறுப்புச் சட்டத்தை, அவசர அவசரமாக – திருட்டுத்தனமாக - தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பாஜக அரசு கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் அந்த சட்ட மசோதா தோல்வி அடைந்தது. இனிமேல் பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் தோல்விதான். புதுச்சேரியுடன் சேர்த்து நமக்கு 40 எம்.பி.க்கள் இருந்ததால், மற்றக் கட்சிகளோடு சேர்ந்து, மற்ற மாநிலத் தலைவர்களோடு மாநில எம்.பி.க்களோடு கலந்து பேசி அந்த மசோதாவை தோற்கடித்தோம்.

அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலில், 200-க்கும் அதிகமான இடங்களை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து உங்களை பார்க்கும்போது 234 தொகுதிகள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை. அப்படி வெற்றி பெற்றால்தான் எதிரிகள் நம்மைக் கண்டு பயப்படுவார்கள். இல்லையெனில் தமிழ்நாட்டை குட்டிச் சுவராக்கி விடுவார்கள். பாஜக ஆட்சி இன்றைக்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.