கொடூர விபத்தில் 5 பேர் பலி..! அப்பளம் போல் நொறுங்கிய கார்..!

 
1

 விஜயநகரம் மாவட்டம் போகாபுரம் நெடுஞ்சாலையில் சுந்தரபேட்டை அருகே நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில், இரு தம்பதியினர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீமுகலிங்கம் சென்று திரும்பியபோது நேர்ந்த இவ்விபத்தில் கார் முழுவதுமாகச் சிதைந்தது. 

ந்திரப் பிரதேச மாநிலம் போகாபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சுந்தரப்பேட்டை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை-16-ல், சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது மஹிந்திரா தார் எஸ்யூவி கார் பயங்கரமாக மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தகரப்புவலசா, மதுரவாடா மற்றும் பீமுனிப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வகலபுடி ஸ்ரீனு (42), அவரது மனைவி குசுமா ரஞ்சனி, பொர்ரா சதீஷ், அவரது மனைவி ஸ்மிருதி மற்றும் கொண்டபு சூரிபாபு ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுகலிங்கம் ஸ்ரீ முகலிங்கேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு, மீண்டும் விசாகப்பட்டினம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, ஸ்ரீகாகுளத்திலிருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற டேங்கர் லாரி ஒன்றை, அதன் ஓட்டுநர் போகாபுரம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டுச் சற்று வெளியே சென்றிருந்தார். அப்போது விசாகப்பட்டினம் நோக்கி வேகமாக வந்த AP 40 KL 0007 என்ற பதிவெண் கொண்ட மஹிந்திரா தார் கார், நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொருவர் மீட்கப்பட்டு சுந்தரப்பேட்டையில் உள்ள சமூக நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போகாபுரம் போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் நொறுங்கிய காருக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனப் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.