ஒரே இரவில் 5 கோர விபத்துகள்... 17 உயிர்கள் பலி!

 
1

உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்டங்களில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அடுத்தடுத்து நிகழ்ந்த 5 வெவ்வேறு சாலை விபத்துகளில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆபத்தான, குறுகிய மற்றும் வளைவுகள் நிறைந்த சாலைகளால் உத்தரகாண்டில் ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவாகின்றன. இந்நிலையில், தெஹ்ரி மாவட்டத்தில் 4 விபத்துகளும், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஒரு விபத்தும் என ஒரே இரவில் நிகழ்ந்த 5 விபத்துகள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதில் முதல் விபத்தாக, தெஹ்ரி மாவட்டம் குலார் (Gular) அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 25 பேர் படுகாயமடைந்தனர்.

அதிகாலை 4:30 மணியளவில் ஹரித்துவாரில் இருந்து சமோலி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து (பதிவு எண்: UK09PA-9779), குலார் சந்தை அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே உள்ள பள்ளத்தில் பாய்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், பியாசி (Byasi) முகாமில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தல்வாலா (Dhalwala) முகாம் மற்றும் படைப்பிரிவு தலைமையகத்திலிருந்தும் கூடுதல் மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் அர்ப்பன் யதுவன்ஷி தெரிவித்துள்ளார்.