அமலுக்கு வந்த மீன்பிடி தடைகாலம்.. எகிற போகும் மீன் விலை..!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகளை கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு, மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நள்ளிரவு முதல் இந்த தடைக் காலம் தொடங்கியது, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது, கடல் வளங்களை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள், ஆழ்கடல் மீன்கள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும் முக்கியமான இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் விசைப்படகுகளில் கடலில் சென்று மீன்பிடிக்கும் போது மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும். இதனால், மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில்: விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய நாட்டு படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் மட்டும் 5 கடல் மைல் வரையிலான தூரத்தில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் மாவட்டம் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதிகளில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் அமலுக்கு வந்தது.தடைக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மீனவர் குடும்பங்களுக்கு உதவிட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.8,000 நிவாரணம் அரசு வழங்குகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மட்டும் 800 விசைப் படகுகள் வரை உள்ளன.
இந்த தடைகளை மீறி மீன் பிடிக்க செல்லும் படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம், 1983ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.