இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி அறிமுகம்!
இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசி 'கியூடெங்கா' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் டகேடா மருந்து நிறுவனத்தின் கியூடெங்கா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்க டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயன்படுத்த கியூடெங்காவுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் டெங்கு தடுப்பூசி இதுவாகும். 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் கியூடெங்கா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியூடெங்கா 3 மாத இடைவெளியில் 2 தவணைகளாக செலுத்தப்படும். ஏற்கெனவே டெங்கு பாதித்தவர்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதால், தடுப்பூசிக்கு முன் பரிசோதனை தேவையில்லை.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

