கடலூர் அருகே பட்டாசு குடோன் வெடித்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு

 
fire

கடலூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தார்.

கடலூர் புதுச்சேரி சாலையில் காட்டுப்பாளையம் அருகே உள்ளது சிவனார்புரம். அங்கு சேகர் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே பட்டாசு குடோனும் இருந்தது. இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் மாசி மகம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு கோவில்களில் இருந்து பட்டாசு ஆர்டர்கள் வந்தன. 

இந்த ஆர்டர்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும் குடோன் முழுவதும் பட்டாசு இருந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. அப்போது பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் குடோன் அருகே இருந்தவர்கள் என அனைவரும் இந்த வெடி விபத்தில் சிக்கினார். குடோனும் இடிந்து தரைமட்டமானது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று தீக்காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண் உயிரிழந்துவிட்ட நிலையில், 80 சதவீதத்திற்கு அதிகமானோர் காயத்துடனும், 5 பேர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அரசு மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.