துணைமின் நிலைய டிரான்ஸ்பார்மரில் தீவிபத்து- இருளில் மூழ்கிய 10 கிராமங்கள்

 
fire

கன்னிவாடி அருகே தமிழ்நாடு துணை மின் நிலையத்தில் 2 டிரான்ஸ்பார்மரில் ஆயில் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தகவலரிந்து நிகழ்விடத்துக்கு வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், நீண்டநேரப் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ஆலந்தூரான்பட்டியில் 22 மெகாவாட் கொண்ட தமிழ்நாடு துணை மின் நிலையம் உள்ளது. இந்த நிலையத்திற்கு செம்பட்டியில் உள்ள தமிழ்நாடு துணை மின் நிலையத்தில் இருந்து  மின்சாரம் கொண்டு வரப்பட்டு கன்னிவாடி, பண்ணப்பட்டி, ஸ்ரீராமபுரம், காமாட்சிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி அளவில் திடீரென இரண்டு டிரான்ஸ்பார்மர்களில் ஆயில் கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ மளமளவென எரிந்ததை பார்த்த துணைமின் நிலைய ஊழியர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உடனடியாக செம்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக  ஆலந்தூரான்பட்டியில் தமிழ்நாடு துணை மின் நிலையத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல்,ஆத்தூர், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் 20க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் முத்தனம்பட்டி, மாங்கரை, கோம்பை அம்மாபட்டி, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, பழைய கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.