ஒசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

 
ஒசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..! 

ஓசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாடா  எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் போராடி  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திம்ஜேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கூத்தனப்பள்ளி பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த தொழிற்சாலையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்று (செப்.28) காலை தொழிலாளர்கள் ஷிப்ட் முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது, அங்கிருந்த ஆனோ கெமிக்கல் பிளாண்டில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீ மளமளவென பரவி  அப்பகுதி முழுவதும் கரும்புகை வெளியேறியது.  

Image

பின்னர் தீ விபத்து குறித்து தவலறிந்த தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள்  உடனடியாக  தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அதேவேளையில்  அங்கிருந்த  3 ஆயிரம் தொழிலாளர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்தனர்.   சுமார் 4 மணி நேர போரட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.  தீ விபத்துக்கான காரணம் மற்றும் பொருட்கள் சேதம் குறித்து ராயக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Image
 
இந்த தீ விபத்தையொட்டி டாடா தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக  கடந்த சில வாரங்களுக்கு முன்பு  கெலமங்கலம் பிரிவு சாலையில் டாடா தொழிற்சாலை பேருந்து மோதி,  இருசக்கர வாகனத்தில் சென்ற  இருவர் உயிரிழந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான 7 பேருந்துகளை அடித்து சேதப்படுத்தினர்.  இந்நிலையில், தற்போது தீ விபத்து என அந்நிறுவனத்திற்கு வரும் அடுத்தடுத்த பிரச்சனைகளால்  டாடா தொழிற்சாலையில்  பணியாற்றும் தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.