அதிகாலையில் நேர்ந்த கொடூரம்: முசாபர்பூர் மருத்துவமனையில் தீ விபத்து; 10 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!!
பீஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (ஜூன் 04) அதிகாலை தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் தீயில் பலத்த காயமுற்று, புகை மூட்டத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தீயணைப்பு படையினர் கூறியதாவது: மருத்துவமனையில் அதிகாலை 3.55 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.மேலும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது, அனைத்து நோயாளிகளும் மீட்கப்பட்டுவிட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

