லக்னோ கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து... உயிர் பிழைக்க மாடியில் இருந்து குதித்த சிறுவர்கள்; 15 பேர் உடல் கருகி பலி!
லக்னோ நகரில் அலிகஞ்ச் பகுதியில் உள்ள அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் மென்பொருள் நிறுவனம், ஆன்லைன் விளையாட்டு மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.நேற்று மதியம் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த மாடியில் 30 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் விளையாட்டு மையத்தில் இருந்த சிறுவர்களும், மென்பொருள் நிறுவனத்தில் இருந்தவர்களும் உடனடியாக தப்பிக்க முயன்றனர். தீ விபத்து ஏற்பட்டதும், அந்த பகுதி முழுவதும் புகையால் சூழ்ந்ததால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்ட மாடியில் இருந்த சிலர் உயிர் பிழைக்க மாடியில் இருந்து கீழே குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்து, 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் முழுமையாக தீ பரவி விட்டது. இருப்பினும், ஹைட்ராலிக் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு தீயை முழுமையாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய குழந்தைகள், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள தீவிர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த மருத்து வமையத்திற்கு 22 சிறுவர்கள் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அனில் அகர்வால் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "15 பேர் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க 2 சிறுவர்கள் கீழே குதித்தனர். பலத்த காயம் அடைந்த அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, தீ விபத்து நடந்த கட்டிடத்திற்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சரியான எண்ணிக்கை தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து லக்னோ வளர்ச்சி ஆணையம் விசாரணையை தொடங்கி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும், அந்த வணிக வளாகத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

