மாருதி ஷோரூமில் தீவிபத்து- தீக்கிரையான கார்கள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் உள்ள ஜெய் கிருஷ்ணா மாருதி ஷோரூமில் அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.
அதிகாலை தொடங்கிய தீ, சில நிமிடங்களில் ஷோரூம் முழுவதும் பரவி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாகின. தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கட்டிடத்தின் அமைப்பு மற்றும் கார்களில் இருந்த எரிபொருள் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. தீ விபத்தில் ஷோரூமின் கார் விற்பனைப் பிரிவு, பழுதுபார்க்கும் மையம் மற்றும் உதிரி பாகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஆகியவை முற்றிலும் சேதமடைந்தன. மேலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய மற்றும் பழுதுபார்க்கப்பட்ட கார்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து காரணமாக திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஷோரூமில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.