காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
தமிழகத்தில் விரைவில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளை ( பிப் 26 ) தொடங்குகிறது.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய திமுகவினரும், அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிய இருக்கிறது. இந்நிலையில், இந்த 6 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சாந்தி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளர் தேன்மொழி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ( பிப்.26) தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 5-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 6-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 9ம் தேதிக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். போட்டி இருந்தால் மார்ச் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

