#BREAKING ஐடி அதிகாரி, திமுகவினர் 50 பேர் மீது வழக்குபதிவு

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி வீடு அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக காலை முதல் சோதனை நடத்திய நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்தனர்.
கரூரில் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் கரூரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த புகார் அடிப்படையில் கரூர் நகர காவல் நிலையத்தில் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தொண்டர் சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரில் ஐடி பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது,பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திமுகவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சோதனையிடச் சென்ற 4 இடங்களில் அதிகாரிகளைத் தடுத்ததாக அடையாளம் தெரியாத 50க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது கரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.