அரசு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்- கட்டை , கம்பால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

 
அரசு கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல்- கட்டை , கம்பால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி  வருகிறது. இக்கல்லூரியில் முசிறி, துறையூர், தா.பேட்டை, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவன் தகராறு குறித்து போன் மூலம் தனது அண்ணனுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனின் சகோதரன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சேர்த்துக்கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் சென்று கம்பு, கட்டைகளால் எதிர் தரப்பு மாணவனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் இரண்டு மாணவனுக்கு மண்டை உடைந்தது. காயமடைந்த இரு தரப்பு மாணவர்களும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார். முசிறி அரசு மருத்துவமனையில் இருந்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாணவர்களிடையே ராக்கிங் செய்ததால் ஏற்பட்ட மோதலா அல்லது சாதிய ரீதியிலான பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கட்டைகளால் அடித்துக் கொண்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.