10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் பெஞ்சல் புயல்!
தற்போதைய நிலவரப்படி பெஞ்சல் புயல் ஆனது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை மையம் அலுவலகத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இது புதுச்சேரி தென்கிழக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. நாளை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரி ஆகிய புயலாக கரையை கடக்கக்கூடும். அடுத்த வரும் 3 தினங்களுக்கு தமிழக புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய கூடும். அதேபோல் ஒரு சில இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் கூடும்.
அடுத்த வரும் 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரே இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை 30 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகமான மழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர் தர்மபுரி நாமக்கல் திருச்சிராப்பள்ளி நாமக்கல் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தரைக்காற்றை எச்சரிக்கை பொறுத்தவரையில் இன்று முதல் நாளை வரை வட தமிழக கடலோரம் மற்றும் அதை ஒற்றியுள்ள பகுதிகளில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் ,மேலும் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும். நாளை புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றானது மயிலாடுதுறை கடலூர் விழுப்புரம் செங்கல்பட்டு காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும். கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகத்தின் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 351 மில்லி மீட்டர் இந்த காலத்தில் இயல்பு அளவு 350 மில்லி மீட்டர் மட்டும் தான்” என்றார்.