பெண் ஊராட்சித் தலைவர் திடீர் மாயம்- கணவர் பரபரப்பு புகார்
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என அவரது கணவர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட காமனூர் தட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், இவரது மனைவி இந்துமதி. கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால், பாண்டியன் தனது மனைவி இந்துமதியை நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட வைத்தார். இதனை தொடர்ந்து பிற சமூகத்தினர் அதிகம் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலின பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டத்தை கண்டித்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் இந்துமதி தலைவர் பதவியிற்கு போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இந்துமதியை எதிர்த்து யாரும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடாததால், இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் பாண்டியன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் அனைவருக்கும் அப்பகுதியில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்துள்ளனர். மேலும் இந்துமதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் நாயக்கனேரி பஞ்சாயத்தை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவ்வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.
இதனால் பாண்டியனின் உறவினர்கள் மலை கிராமத்தை விட்டு வெளியேறி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்றுள்ளனர். மேலும் பாண்டியன் தனது மனைவி இந்துமதி மற்றும் இரு ஆண் பிள்ளைகளுடன் மலைகிராமத்தை விட்டு ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இந்துமதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வெகுநேரம் ஆகியும் இந்துமதி வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடியுள்ளார். இந்துமதி காணாதது குறித்தும் நாயக்கனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது சந்தேகம் உள்ளதாகவும் இந்துமதியின் கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.