தலைக்கேறிய போதை- பெண் குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொலை செய்த தந்தை

 
தலைக்கேறிய போதை- பெண் குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொலை செய்த தந்தை

கோவையில் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த புஷ்பா, கைது செய்யப்பட்ட அவரது கணவன் தங்கராஜ்

கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி சேர்ந்தவர் தங்கராஜ் (41). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9). ஷிவானி (3). இரண்டு குழந்தைகள் இருந்தனர். பெயிண்டிங் வேலை செய்து வந்த தங்கராஜ் கடந்த சில வாரங்களாக வேலைக்குச் செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி புஷ்பாவிடம் தகராறு ஈடுபட்டு வந்தார்.  இதனால் புஷ்பா வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த தங்கராஜ் மனைவி புஷ்பாவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தங்கராஜ் ஆத்திரத்தில் தனது மூத்த மகள் ஹரிணியை வீட்டின் அருகே இருந்த கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி வீசியுள்ளார். 


உடனே  மகளைக் காப்பாற்ற புஷ்பா தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அப்போது மூன்று வயது மகள் ஷிவானியையும் தங்கராஜ் தண்ணீர் தொட்டிக்குள் போட்டு தொட்டியை மூடி உள்ளார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்குள் சென்று படுத்துள்ளார்.  மறுநாள் காலை எழுந்து தண்ணீர் தொட்டியை திறந்து வைத்துவிட்டு, வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், விசாரித்த போது அவர் முறையாக பதில் கூறாமல் இருந்தார், இதனால்  சந்தேகம் அடைந்து அவர்கள் புஷ்பாவை அழைக்க சென்றனர்.  அப்போது புஷ்பா மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிகள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.  இதையடுத்து மூன்று உடல்களையும் மீட்டு வீட்டிற்குள் வைத்த அக்கம் பக்கத்தினர்,  உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு புஷ்பா மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

பின்னர் போதையில் இருந்த தங்கராஜை  பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.  மேலும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தங்கராஜ் தனது வாக்குமூலத்தை கொடுத்த நிலையில் விசாரணைக்கு பின் தங்கராஜை போலீசார் கைது செய்தனர்.  சரியாக வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த தங்கராஜ் தொடர்ந்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்த நிலையில்,  குடிபோதையில் பெற்ற மகள்களையும் மனைவியையும் கொலை செய்த  சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.