குடிபோதையில் தகராறு- மகனை கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தை

 
கிணற்றில்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் மது போதையில் தொடர்ந்து தினந்தோறும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்த மகனை தந்தையே கொலை செய்து கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்(55). இவரது மகனான ராஜ பிரபு(33) தினந்தோறும் மது போதையில், தனது வீட்டிலும் தனது அருகில் உள்ள வீட்டார்களிடமும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், தனது உறவினர் பொன்னையா உதவியுடன் தனது மகன் ராஜபிரபுவை நேற்று இரவு கொலை செய்து தனது வயலில் உள்ள கிணற்றில் கை, கால்களை கட்டி வீசி சென்றுள்ளார். 

இதனை அடுத்து இன்று காலை மேலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த பெருமாள், தனது மகனை கொலை செய்து தனது கிணற்றில் வீசி உள்ளதாக தகவல் தெரிவித்ததை அடுத்து, நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 30 அடி ஆழத்தில் கிடந்த ராஜகுருவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுவுக்கு அடிமையாகி தினந்தோறும் தனக்கு தொல்லை கொடுத்து வந்த தனது மகனை தந்தையே கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பெருமாள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் பொன்னையா ஆகியோரை  கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.