பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்க குழந்தைக்கு தண்டனை கொடுத்த கொடூரன்
செங்கல்பட்டில் பெற்ற குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலான நிலையில் குழந்தையை மீட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கார்த்திகேயன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கார்த்திக் செங்கல்பட்டிலும் அவரது மனைவி தனது குழந்தையுடன் வந்தவாசியிலும் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தனது குழந்தையை செங்கல்பட்டில் தனது கணவர் அம்மா வீட்டில் விட்டு விட்டு கார்த்திக்கின் மனைவி மீண்டும் வந்தவாசி சென்றுவிட்டுள்ளார். இதனால் கார்த்திக் தனது இரண்டரை வயது மகளை அடிப்பது, தலையில் தட்டுவது, அறைவது மற்றும் கழுத்தை நெறித்து கொள்ள முயற்சிப்பது போன்ற கொடூர செயல்களை செய்யும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி செங்கல்பட்டு குழந்தைகள் நல குழும அதிகாரிகள் போலீசார் உதவியுடன் கார்த்திக்கிடமிருந்து குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு குழந்தைகள் நல குழும ஒருங்கிணைப்பாளர் சங்கமித்ரா புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்தனர். அப்போது போலீசார் கார்த்திக்கை கைது செய்த போது தான் விஷம் அருந்தியதாக போலீசாரிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கார்த்திக் திடீரென குழந்தைகள் நல குழும அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது குழந்தையை ஒப்படைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் அங்கிருந்த கணினி, பீரோ உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி உள்ளார். மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்களையும் தாக்கி உள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் தப்பியோட முயற்சித்த கார்த்திகை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போது, தான் மீண்டும் விஷம் அருந்தியதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கார்த்திக் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள் நல குழும அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பணியாளரை தாக்கியதுடன் கணினி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.