நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற இடத்தில் தந்தை, மகன் நீரில் மூழ்கி பலி

ஒசூர் அருகே விவசாய தண்ணீர் சேமிப்பு குட்டையில் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க சென்ற தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளியான முனிரத்னம்(32) என்பவர் தனது இரு மகன்களான 6ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் குமார்(11), கலைச்செல்வன் ஆகியோருக்கு அருகே உள்ள தொட்டூர் என்னும் கிராமத்தில் வெங்கடேசப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நீர் சேமிப்பு குட்டையில் நீச்சல் கற்றுக்கொடுக்க சென்றார். அப்போது முனிரத்னம் மற்றும் மூத்த மகன் சந்தோஷ் குமார் ஆகிய இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் அருகே இருந்தவர்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் பகுதிகளில் யுகாதி பண்டிகையை கொண்டாடி வரும்நிலையில் தந்தை மகன் இருவரும் தண்ணீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.