ஒன்றாக மது அருந்திய தந்தை, மகள்! அதன்பின் நேர்ந்த விபரீதம்
அந்தியூர் அருகே மது போதையில் தகராறு செய்து கொண்டு வறண்ட கிணற்றில் குதித்த மகள், தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள சின்னபருவாச்சியடுத்த ஒட்டபாளையத்தை சேர்ந்தவர் ராணி(36). கூலி தொழிலாளி. இவரது கணவர் மாரசாமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால், கோபி கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராணியின் தந்தை மாதேஸ்வரன்(65) தன் மகளுடன் வசித்து வருகிறார். தந்தையும், மகளும் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில் இருவருக்கும் குடிப் பழக்கம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் வேலை முடிந்து, மது வாங்கி வந்த இருவரும், வீட்டில் ஒன்றாக குடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ராணி தற்கொலை செய்து கொள்ள கதவை சாத்திக் கொண்டார். இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மாதேஸ்வரன் கூறியதால், ராணி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தவர், அதே பகுதியில் உள்ள பாண்டுரங்கன் என்பவரது தோட்டத்தில் பயனின்றி கிடந்த வறண்ட கிணற்றில் குதித்துள்ளார், தொடர்ந்து அவர் பின்னை சென்ற அவரது தந்தை மாதேஸ்வரன் எனும் கிணற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த அவர்களது 19 வயது மகள் கிணற்றில் தனது தாய் மற்றும் தாத்தா குதித்து விட்டதாக சத்தம் போட்டு உள்ளார். அக்கம் பக்கத்தினர், அந்தியூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இறங்கி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த ராணியை முதலில் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அதன்பின், தலை, கால், கைகளில் பலத்த அடிபட்டு கிணற்றிலேயே உயிரிழந்த மாதேஸ்வரனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ராணி மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் மகள், தந்தை கிணற்றில் குதித்த தந்தை உயிரிழந்த நிலையில் மகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


