விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது - விஜயகாந்த் கண்டனம்!!

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைது என்கின்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. மேலும் அதைவிட மிகக் கொடுமையானது ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் திருடர்களும், கொலையாளிகளும், தீவிரவாதிகளும், சுதந்திரமாக சுற்றி திரிகின்ற போது அனைவருக்கும் உண்ண உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுள்ளதை வண்மையாக கண்டிப்பதோடு, இதுவரை அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் கிடையாது.
விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்காக குண்டர் சட்டம் அவர்கள் மீது பாய்ந்து உள்ளது, இதை ஒட்டுமொத்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் திருவண்ணாமலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை இந்த நேரத்தில் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
"விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான், நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்" என்பதற்கு இணங்க இந்த நாட்டில் எஜமானர்கள், முதலாளிகள் விவசாயிகள் தான். ஏற்கனவே, விவசாயிகளுக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் வறண்டு போய், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். இப்பொழுது பெருமழை பெய்து பயிர்கள் எல்லாம் மூழ்கி, அதிலும் முற்றிலுமாக அவர்கள் நஷ்டத்தை அடைகின்ற இந்த சூழ்நிலையில், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன, அவர்களுடைய கோரிக்கையை அரசின் முன் வைக்கிறார்கள், அரசு அதை செவிசாய்த்து அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டுமே தவிர, விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, விவசாயிகளை உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.