நெல் மூட்டைகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை- மத்திய குழுவினர் ஆய்வு

 
ச் ச்

தமிழகத்தில் நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவது  குறித்து  மத்திய குழுவினர்  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யாததாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில்  மழையில் நெல் நனைந்ததால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், நெல் ஈரப்பதம் குறித்து 2 நாட்கள் ஆய்வு செய்ய மத்திய உணவுத்துறை அமைச்சகத்து சேர்ந்த குழு தமிழகம் வந்துள்ளது.

நேற்று செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், இன்று  2-வது நாளான இன்று திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள செம்பேடு  காக்கவாக்கம், சூளைமேனி, ஊத்துக்கோட்டை, கச்சூர் ஆகிய பகுதிகளிலும் மத்திய உணவு துறையின் உதவி இயக்குநர் ப்ரீத்தி தலைமையிலான குழுவினர் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். இக்குழுவினர், திறந்தவெளியில் குவிக்கப்பட்டிருந்த நெல் குவியலை அள்ளி, ஈரத்தன்மையை அறிந்தனர். கருவியில் நெல்லை வைத்து ஈரப்பத சதவீதத்தை அளவிட்டனர். ஆய்வகத்தில் சோதனை செய்ய, சிறிய பாக்கெட்டிலும் நெல்லை எடுத்து சென்றனர். இவர்களுடன் இந்திய உணவு கழகம் மேலாளர் அருண் பிரசாத், தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கழகம் சீனியர் மேலாளர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஆகியோரும் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் 26436 ஹெக்டர் அளவில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் 69 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பாக 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் சார்பாக 6 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு நேரடி கொள்முதல் நிலையம் மூலமாக இதுவரை  மொத்தம் 7866 விவசாயிகளிடமிருந்து 58320 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7866 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு  145.89 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது மேலும் 2726 விவசாயிகளிடமிருந்து சுமார் 15000 மெடன் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகிறது.