ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 13 தேசிய விருதுகளை வென்று அசத்தல்!

 
1

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளன. 

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து விளைபொருட்களை மொத்தமாக சேகரித்து, அதன் மூலம் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவும் மற்றும் பொதுவான வளங்களைப் பயன்படுத்தி வருமானத்தை உயர்த்திக்கொள்ளவும் உருவாக்கும் ஒரு கூட்டமைப்பு ஆகும். 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் 8 மாவட்டங்களில் மொத்தம் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஈஷா அவுட்ரீச் அமைப்பு வழிகாட்டி, ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிறுவனங்களே இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளன. 

இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் புதுடில்லியில் நேற்று (12/12/2025) நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உச்சி மாநாடு மற்றும் விருது விழா 2025-இல், ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விருதுகளை வென்றன. அதே போன்று டெல்லியில் டிசம்பர் 9 அன்று நடைபெற்ற 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா' (MFOI) விருதுகள் விழாவில், 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பல தேசிய அங்கீகாரங்களைப் பெற்றன. 

இது குறித்து ஈஷா அவுட்ரீச்சின் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திட்ட இயக்குநர் ஆர். வெங்கட் ராசா கூறுகையில், "இதுவரை, ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பதியாளர் நிறுவனங்கள் மொத்தம் 23 தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த விருதுகள் மூலம் கிடைத்திருக்கும் அங்கீகாரம் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது, உழவர் உற்பதியாளர் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாறவும், விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தவும், விவசாயத்தை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றவும், அடுத்த தலைமுறையினரை விவசாயத்தைத் தொடர ஊக்குவிக்கவும் ஈஷா அவுட்ரீச் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெற்ற விழாவில், காடையாம்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு தேசிய அளவில் முதல் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. மாடுகளின் இனப்பெருக்க ஆரோக்கியம் மேம்பட, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாட்டுத் தீவனத்தை உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த மாட்டுத் தீவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

‘காடையாம்பட்டி உழவன்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த மாட்டுத் தீவனம், மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதனுடன் பாலின் தரம், ஊட்டச்சத்து, பாலில் உள்ள கொழுப்பு மற்றும் SNF அளவை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. 

இது குறித்து காடையாம்பட்டி FPO-வின் தலைவர் பழனிசாமி கூறுகையில் “இந்த தேசிய அளவிலான அங்கீகாரம், எங்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புகளை உருவாக்க உதவும். அதன் மூலம் மேலும் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.” எனக் கூறினார். 

மேலும் இதே விழாவில் நெகில்லா சித்தா FPO புளியை சிறந்த முறையில் சுத்திகரித்து பேக்கேஜ் செய்ததற்காக, இரண்டாம் இடத்திற்கான விருதை பெற்றது. இந்நிறுவனம் புளியை சுத்தம் செய்து தரப்படுத்துவதில் இயந்திரங்களைப் பயன்படுத்தி, பொருளின் தரத்தை உயர்த்தி உள்ளது. மேலும்  தொழிலாளர் செலவைக் குறைத்ததோடு, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளது. 

மேலும், கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு FPOக்களில் இருந்து 54 விவசாயிகள் 'மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா' விருதுகளைப் பெற்றுள்ளனர். ஈஷா அவுட்ரீச்சின் ஆரம்ப காலத்திலிருந்தே செயல்படும் வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம், வர்த்தக உயர்வு,  நல்ல நிர்வாகம், விவசாயிகள் ஒருங்கிணைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் செயல்பாடுகளுக்காக 2020 முதல் 2022 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறந்த FPO விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 12,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறந்த சந்தை வாய்ப்புகளைப் பெறவும், நல்ல வேளாண் முறைகளை பின்பற்றவும், நிலைத்த கூட்டு வியாபாரங்களை உருவாக்கவும் ஈஷா அவுட்ரீச் உதவுகிறது. இந்த நிறுவனங்கள் ஒன்றாகச் சேர்ந்து ₹281 கோடி மொத்த வர்த்தகத்தை சாதித்துள்ளன. தேங்காய், வாழை, கொப்பரை, மிளகு, காபி, சிறுதானியங்கள், நிலக்கடலை போன்றவை இந்நிறுவனங்களின் பிரதானப் பயிர்கள் ஆகும்.