பிள்ளை போல வளர்த்தேனே மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்! 10 ஆண்டுகள் ஆசையாக வளர்த்த மரங்கள் வெட்டி சாய்ப்பு..!
10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்.
வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வி. கணவரை விபத்தில் இழந்த இவர், தனது மகனும் பல் மருத்துவருமான பாலமுருகனுடன் இணைந்து, இயற்கை முறையில் பல்வகை பண்ணையை உருவாக்கி பராமரித்து வந்தார்.
தமது கணவரின் நினைவாகவும், சமூக அக்கறையுடனும் செல்வி வளர்த்த மா, தேக்கு, மகோகனி, பப்பாளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலத்தில் பயிரிடப்பட்டு வந்தன.இந்நிலையில், தியாகதுருகம் பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதை அமைப்பதற்காக, அதிகாரிகள் இவர்களது நிலத்தை ஆய்வு செய்தனர். மரங்களுக்கு இடையூறு இல்லாதவாறு மின் பாதையை சற்று தள்ளி அமைக்க வேண்டும் என செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதிகாரிகளும் மாற்று வழி செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில், தற்போது முறையான ஒப்புதலோ அல்லது முழுமையான இழப்பீடோ வழங்கப்படாமல், காவல்துறையினர் அதிரடியாகக் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலத்தைச் சுற்றி வளைத்த போலீசார், மருத்துவர் பாலமுருகனையும், அவரது தாயாரையும் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, அவர்கள் கண்முன்னேயே 100-க்கும் மேற்பட்ட மரங்கள் இயந்திரங்கள் மூலம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. மரங்களைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத செல்வியை, போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய செல்வி, அதிகாரிகளும் போலீசாரும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். அரசாங்கம் ஒருபுறம் மரம் நடும் திட்டங்களை ஊக்குவிக்கும் வேளையில், 10 ஆண்டுகள் வளர்த்த மரங்களை இப்படி அழிப்பது சமூகத்திற்கே பெரும் கேடு என வேதனையுடன் தெரிவித்தார். மேலும் உரிய இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர் 😭 pic.twitter.com/xDkVZOXKXG
— மு. சிவக்குமார் நாதக (@SivaKum56664767) August 9, 2026

