தமிழக அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் மாற்றியமைப்பு

 
setc

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,120 வழித்தடங்களின் கீழ் தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கிடையே விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்டின் விலையை இயக்க செலவுகளை பொறுத்து அரசு நிர்ணயம் செய்வது வழக்கம். அந்த வகையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் கட்டண உயர்வு மற்றும் டயர் உட்பட உதிரி பாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட தொடர் விலையேற்றத்திற்கு மத்தியிலும் இதுவரை அரசு விரைவு பேருந்துகளில் பேருந்து கட்டணம் சமீப காலமாக உயர்த்தப்படாத நிலை தொடர்ந்து வந்தது.

இதனிடையே பொங்கல் பண்டிகையொட்டி வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக பல்வேறு வழித்தடங்களில் விரைவு பேருந்துகளில் 10 முதல் 30 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. உதாரணமாக சென்னையில் இருந்து சேலத்திற்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் பயணம் செய்ய 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி கட்டணம் 310 ஆக வசூலிக்கப்பட்டது. இதேபோல் சேலம் நெல்லை இடையே 425 ரூபாய் கட்டணத்தில் இருந்து 430 ஆகவும் , நெல்லை ஓசூர் இடையே 590 இருந்த கட்டணம் 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல்வேறு வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பயணிகள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் அளித்த விளக்கத்தின் படி, அரசு விரைவு பேருந்துகளைப் பொருத்தவரை அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கிமீ க்கு ரூ.1 வசூலிக்கப்படுகிறது. அதேபோல் குளிர்சாதனமில்லா வசதி கொண்ட பேருந்துகளில் படுக்கையில் பயணிக்க ரூ.1.50, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.2 என்ற வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் பல்வேறு வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்துள்ளது அதற்கு ஏற்ப தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Image

உதாரணமாக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில் சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் தென் மாவட்டம் செல்லக்கூடிய பயணிகளுக்கு பயண தூரம் குறைவதால் கட்டணம் குறைக்கப்பட்டது. மற்ற சில வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் சில வழித்தடங்களில் பயண கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.