ரசிகர்கள் ஷாக்..! இந்திய அணியின் முதல் தோல்வி..! 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி..!

 
1

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதிய அதே அணிகள் மீண்டும் களமிறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டு தென் ஆப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தனர். நட்சத்திர வீரர் டி காக் (6), கேப்டன் மார்க்ரம் (4) மற்றும் ரிக்கெல்டன் (7) ஆகியோர் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த இக்கட்டான நிலையில் இணைந்த டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை மீட்டெடுத்தது. மில்லர் 26 பந்துகளில் அரைசதம் கடந்து 63 ரன்கள் குவிக்க, பிரேவிஸ் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்டப்ஸ் அதிரடியாக 44 ரன்கள் சேர்த்ததால், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

188 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கித் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 51 ரன்களுக்குள்ளேயே முன்னணி வீரர்களான இஷான் கிஷன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா உள்ளிட்ட 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரும் தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

யான்சென் 4 விக்கெட்டுகளை வீழ்த்த ஷிவம் துபே மட்டும் ஓரளவு போராடி 42 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.