ரசிகர்கள் ஷாக்..! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் ஓய்வு..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளென் மேக்ஸ்வெல், அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் 7 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 130 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். 3 விதமான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 7,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 136 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மேக்ஸ்வெல்லின் இந்த முடிவு, ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், உலகின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான கிளென் மேக்ஸ்வெல், உள்ளூர் கிரிக்கெட் தொடங்கி சர்வதேச அரங்கு வரை தனது தனித்துவமான பேட்டிங் பாணியால் ரசிகர்களைக் கவர்ந்தார். அதிலும் அவர் அடிக்கும் சில விசித்திரமான ஷாட்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாகவே கிரிக்கெட் ரசிகர்களால் இவர் அன்போடு "தி பிக் ஷோ" (The Big Show) என்று அழைக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்காகக் கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கிளென் மேக்ஸ்வெல், இதுவரை 7 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 130 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்கத் தவறிய மேக்ஸ்வெல், ஒரு சதத்துடன் 339 ரன்களையும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாகக் கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், மறுபக்கம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன் மற்றும் விக்கெட் வேட்டையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 4 சதங்கள், 23 அரைசதங்கள் என 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 2023ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைச் சதமும் அடங்கும். இதுதவிர, பந்துவீச்சில் 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும், சர்வதேச டி20 போட்டியைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கியத் தூணாக விளங்கிய மேக்ஸ்வெல், பேட்டிங்கில் 5 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் என 2,897 ரன்களையும், பந்துவீச்சில் 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் மற்றும் சதமடித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற சாதனைகளையும் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி கடந்த 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கோப்பையையும், 2021ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையையும் வென்று உலகச் சாம்பியனாக உருவெடுப்பதில் இவர் மிக முக்கியத் தூணாக விளங்கினார். இந்நிலையில் தான், தற்சமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 14 ஆண்டுகாலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்த அவரது அதிரடி சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச போட்டிகளுடன் சேர்த்து, தனது சொந்த மாநில விக்டோரியா அணிக்கான உள்ளூர் முதல்தர மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள மேக்ஸ்வெல், பிக் பாஷ் லீக், ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

