ரசிகர்கள் ஷாக்..! பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' ரிலீஸ் இல்லை..!

 
1 1

'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி பி.டி. ஆஷா நேற்று தீர்ப்பளித்தார். அதில், தணிக்கை வாரியத் தலைவர் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் பிற்போக்குத்தனமானவை என்று கூறி, படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வு, தயாரிப்பு நிறுவனத்திடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது.

"தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்தது ஏன்? நீங்களாக ஒரு தேதியை முடிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. சான்றிதழ் இல்லாமல் எப்படி படத்தை வெளியிட முடியும்?" என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.

பொங்கல் ரிலீஸ் இல்லை: தணிக்கை வாரியத் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி தவறு என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தத் தடையின் காரணமாக, 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.