ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகர் இளவரசு

 
ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகர் இளவரசு 

நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்காக நடிகரும் தென்னிந்திய திரைப்பட சங்க செயலாளருமான இளவரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.


தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த  2016 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தாததால், உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2023 டிசம்பர் 12 ம்தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக போலியாக தெரிவிப்பதாக காவல்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, நடிகர் இளவரசுவின் தொலைபேசி பதிவுகள் மற்றும் லொகேசன் காவல்துறை சார்பில் சமர்பிக்கப்பட்டது. அதில், காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தவறான தகவலை தெரிவித்ததற்காக பகிரங்க மன்னிப்பு கோரினார்.  இந்த வழக்கு இன்று (ஜனவரி 30) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளவரசு மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 2016ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது ஏற்க முடியாது. 

அனைத்து வழக்குகளிலும் காவல்துறை மெத்தனமாகவே நடந்த கொள்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் செயல் கண்டனத்துக்கு உரியது. சங்க நிதியை முறைகேடு செய்ததாக தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, சாதாரண மனிதர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபோல பல வழக்குகளில் காவல்துறை தாமதமாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. அதனால்,  சங்க முறைகேடு தொடர்பாக 2016ல் கொடுக்கப்பட்ட புகார் மீது 8 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் பிப்ரவரி 05ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.