தடையை மீறி வைக்கப்பட்ட திருமண பேனரால் சிதைந்த குடும்பம்: திருவள்ளூர் அருகே நிகழ்ந்த துயர சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பகுதியில், திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பலத்த காற்றில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்ற செஞ்சைய்யா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பேனர் வைப்பது குறித்து உயர், உச்ச நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தும், அதிகாரிகளின் மெத்தனம் காரணமாக, இதுபோன்ற உயிரிழப்பு நடப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில், 2019, செப்., 12ல் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ, 23, என்ற இளம்பெண் விபத்தில் சிக்கினார். அப்போது, பின்னால் வந்த குடிநீர் லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த இந்த இளம்பெண்ணின் இறப்பு, தமிழகம் முழுதும் அதிர்வலையை எழுப்பியது.
இதுகுறித்த வழக்கிற்கு பின், உயர், உச்ச நீதிமன்றங்கள், ‘பொது இடங்களில் விளம்பர பேனர், கட் – அவுட் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது’ என, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்தன. ஆனாலும், சாலை, பொது இடங்களில், விளம்பர பேனர், விசேஷ நிகழ்ச்சிகளுக்கான பேனர் வைப்பது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி நிர்வாகங்களின் மெத்தனப்போக்கால், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, பேனர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கனகம்மாசத்திரம் அருகே, காஞ்சிப்பாடி இருளர் காலனியில் வசித்து வந்தவர் செஞ்சய்யா, 38. இவரது மனைவி ரேணுகா, 34. மனைவி ரேணுகாவுடன், இருசக்கர வாகனத்தில் ஊத்துக்கோட்டை சென்று, நேற்று மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் நெடுஞ்சாலை, போந்தவாக்கம் தனியார் ரைஸ் மில் அருகே, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த திருமண பேனர் சரிந்து, இவர்கள் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் சரிந்தனர். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஏறியதில், பலத்த காயமடைந்த செஞ்சய்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி ரேணுகா, தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பென்னலுார்பேட்டை போலீசார் செஞ்சய்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

