'வீட்டில் சகுணம் சரியில்லை... பூஜை செய்ய வேண்டும்' என ஊரை ஏமாற்றி வந்த போலி சாமியார் கைது

ஏலூரில் வீட்டில் சகுணம் சரியில்லை பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி பணம் பெற்று ஏமாற்றி வந்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் கொத்தக்கூடம் மாவட்டம் அஸ்வராவ்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாலய்யா (37) சாமியார் வேடமணிந்து பலரிடம் மோசடி செய்து பணம் வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஏலுரு மாவட்டம் சாட்ராய் மண்டலம், அருகோலனு பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் சனி பிடித்துள்ளது உங்க மருமகன் இறந்துவிடுவார் உங்கள் மகன் உயிருக்கும் கண்டம் உள்ளது. இதற்கு விஜயவாடா கனகதுர்கை அம்மன் இயந்திரம் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று ரூ.61 ஆயிரம் பணம் பெற்று கொண்டார். பின்னர் சங்கராந்தி பூஜை செய்வதாக கூறி சென்றார். மேலும் இதேபோன்று நுஜிவீடு மண்டலத்தில் ஒரு விட்டில் அவரது மகன் வேலையில்லாமல் சுற்றி வருவதை அறிந்து யாரே சிலர் சுனியம் வைத்திருப்பதாகவும் அந்த சுனியத்தை எடுத்து சாந்தி பூஜை செய்ய வேண்டும். இதற்காக வனதேவதைகளான சம்மக்கா சரக்கா கோயிலில் செய்தால், அவன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.26,400 பணம் பெற்று சென்றார். பாதிக்கப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஏலூரு மாவட்ட எஸ்.பி. பிரதாப் சிவ கிஷோரின் உத்தரவின் பேரில், போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி சாமியாரை தேடத் தொடங்கினர். இந்நிலையில் சாட்ராய் - போலவரம் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போலி சாமியாரை போலீசார் பார்த்து பிடிக்க முயன்றனர். போலீசார் அவரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற அவரைக் கைது செய்து அவரிடமிருந்து தங்க முலாம் பூசப்பட்ட தங்க காசுகள்,பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் அனைவரும் போலி சாமியார்களிடம் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது சாமியார்கள் சுற்றித் திரிந்தால், போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மோசடி சாமியாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.