காரைக்குடிக்கு போலி மேயர்.. கருணாநிதி இருந்திருந்தா இதை செஞ்சிருக்க மாட்டார் - நாராயணன் திருப்பதி..

 
narayanan thirupathi

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஒருவர்  தான் தமிழக முதல்வராக இருப்பார் என  பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் நன்றி அறிவிப்பு மற்றும் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்  நாராயணன் திருப்பதி கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காரைக்குடியில் போலி மருத்துவரை போன்று போலி மேயர் உள்ளார். காரைக்குடி அதிகாரபூர்வமாக மாநகராட்சியாக மாறாதபோது, நகராட்சித் தலைவர் எப்படி மேயர் ஆனார். நகராட்சியில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும்.   அதிகார மமதையோடு நடப்போர் யாராக இருந்தாலும் பாஜக வன்மையாக கண்டிக்கும். 

stalin

அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். வருகிற 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர் தான் தமிழக முதல்வராக இருப்பார். மாநகராட்சி என  அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் மேயர் என்று அழைத்து கொள்வதை போல 2026ல் நாங்கள் தான் எம்எல்ஏ , முதல்வர் எல்லாம்” என்று கூறினார். 

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி செயல்பாடு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கட்சி மாநில தலைவர் இளம் தலைவராக துடிப்போடு எதிர்கட்சியாக செயல்படும் போது பிறரை பற்றி ஏன் சிந்திக்க வேண்டும் என்றார். மேலும், கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்க மாட்டார் என்றும், மாவட்டத்தில் தொழில் துறை முதலீட்டுக்கு அனைத்து தரப்பினரயும் இணைத்து ஆலோசனை செய்து மத்திய அரசிடம் நிதி ஒதுக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பிக்கு ஆலோசனை வழங்கினார்.