”10th கூட பாஸ் ஆகல... ஆனா பார்த்த வேல டாக்டர்”- அண்ணா நகரில் சிக்கிய கைராசி டாக்டர்
சென்னை அண்ணா நகரில் பத்தாம் வகுப்பு பெயில் ஆன நபர் ஆயுர்வேத மருத்துவர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் SRS AYURVEDIC HOSPITAL என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவர் ஆயுர்வேத மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். ஆனால் இவர் முறையாக ஆயுர்வேதம் மருத்துவம் படிக்கவில்லை என மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்கத்திற்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை பேராசிரியர்- டாக்டர் சுகுமாரன் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் போலி மருத்துவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மருத்துவமனையில் இருந்த ஆயுர்வேத மற்றும் அலோபதி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி வெங்கடேசன், கடைகளில் விற்கும் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாங்கி படிப்பாராம். நாளிதழ்கள், வார மாத இதழ்களில் வரும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளை உள்ள பக்கங்களை கட்டிங் செய்து வைத்துக்கொண்டு அதை படித்து அதன்படி மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்குவாராம். வண்ணாரப்பேட்டையில் 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருவதாகவும், கைராசி மருத்துவர் வெங்கடேசன் என கேட்டால் தெரியாத ஆட்களே இல்லை எனவும் அண்ணாநகர் பகுதியில் பில்டப் கொடுத்துள்ளார். அலோபதி மருத்துவர்களிடம் நோயாளி போல சென்று என்னென்ன நோய்க்கு என்னென்ன மருந்து மாத்திரைகள் என, அவர்கள் எழுதிக் கொடுக்கும் பிரஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு அலோபதி மருத்துவமும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ அதிகாரிகள் குழுவுடன் சென்ற போலீசார் வெங்கடேசனை பிடித்து செய்து அண்ணா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அண்ணா நகர் போலீசார், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலி மருத்துவர் வெங்கடேசனை கைது செய்தனர். ஆயுர்வேத மருத்துவ மாநாடுகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது போல போட்டோக்களை வைத்து ஏமாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகரில் மட்டும் தான் மருத்துவமனை நடத்தினாரா? வேறு பகுதிகளில் மருத்துவமனை வைத்துள்ளாரா?. ஏற்கனவே போலி மருத்துவர் என கண்டறியப்பட்டு வேறு காவல் நிலையங்களில் கைதாகி உள்ளாரா? எனவும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.


