இ.பி.எஸ்-க்கு நேருக்கு நேர் சவால்: "எடப்பாடியில் ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிப்போம்!"- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
மதுராந்தகம் தேர்தல் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
ஒரு அமைச்சராப் பேசுவதைவிட, ஒரு தவெக தொண்டனாகப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. நான் சட்டமன்றத்தில் பேசினாலே, ‘ப்ரோட்டோகால், ப்ரோட்டோகால்' என்று சொல்லி பேசவிட மாட்டிக்கிறார்கள். அது என்னவோ தெரியவில்லை; நான் எழுந்து நின்றாலே பேசவிட மாட்டிக்கிறார்கள். அடுத்த முறை மூச்சுகூட விட முடியாது போல. மூச்சுவிட்டாலே கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
சட்டமன்றத்தில் எல்லாத்தையும் பேக் பண்ணி அனுப்பிவிட்டோமா? 75 வருட கட்சி, ஒரு ஆலமரம், முருங்கை மரம் என்று எல்லாம் சொன்னார்கள். சட்டமன்றம் வரும்போது, இவர்களுக்குத்தான் அரசியல் தெரியும் என்பது போல எல்லோரும் கிளம்பி வந்தார்கள். ஆனால், முடியும் போது யாருமே சட்டமன்றத்தில் இல்லை.அதுவும் முதல்வர் வரும்போது சுத்தமாக இருக்க மாட்டார்கள். அவர பேசு, பேசு என்று சொல்வார்கள். பேச ஆரம்பித்தால் வெளியே போய்விடுவார்கள்.
"திமுக இங்கே டிபாசிட் இழக்கும்; கடந்த முறை எப்படி ரூ.5 ஆயிரம் வாங்கினீர்களோ, அதே போல இந்த முறையும் ரூ.5 ஆயிரத்தோடு திமுக வருவாங்க. தீபாவளிக்கு டிரஸ் வாங்கித் தர பணத்தோடு வருவார்கள். அனைத்தையும் வாங்கிக் கொண்டு, போன முறை போல இந்தமுறையும் விசிலுக்கு போட்டுவிடுங்கள்.
"எழுதி வெச்சுக்கோங்க, இடைத்தேர்தலில் தவெக ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம், இத்தனை காலமாக பாரம்பரியமாக இருந்த இந்த கலாச்சாரத்தை உடைப்போம். நீர்வளத்துறை அமைச்சர் வந்திருக்கார், பொதுப்பணித்துறை அமைச்சர் நான் வந்திருக்கேன், குடிநீர் இல்லை, ரோடு இல்லைனு இனி சொல்லாதீங்க'
தவெகவிடம் பணம் வாங்கிவிட்டு ராஜினாமா செய்ததாக ஈபிஎஸ் சொல்கிறார். எடப்பாடி தொகுதியில் ஏன் தவெக வேட்பாளர் வாபஸ் வாங்கினார்? விசில் சின்னம் அங்கு நின்றிருந்தால், அவரும் தோற்றிருப்பார். மதுராந்தகத்திற்கு ஈபிஎஸ் 4 நாள்கள் பிரசாரத்திற்கு வருகிறாராம். அங்கே ரிசைன் பண்ணிவிட்டு, எடப்பாடியில் அவர் நிக்கட்டும். ஒரு கல்லூரி பெண்ணை நிறுத்தி, அவரை தோற்கடிப்போம். அப்படி தான் இன்றைய அதிமுக உள்ளது.
"கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய ஓட்டு, இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இரட்டை இலையும், விசிலும் ஒன்றாகிவிட்டது. பெரிய வித்தியாசம் இல்லை; மக்கள் உணர்ந்துவிட்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் வலிமை, விஜய்க்கு மட்டும் தான் உள்ளது. தற்போது இருப்பது எடப்பாடி அதிமுக தான், இரட்டை இலை முடிந்துவிட்டது. எம்ஜிஆர், ஜெ., ஆத்மா விசில் சின்னத்தில் இருக்கிறது.
தீபாவளிக்கு திமுக ரூ.5 ஆயிரம் பணத்துடன் வரும். இடைத்தேர்தலில் ரூ.10,000 கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

