வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்..!

 
1 1

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வரும் டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று அதிகாலை 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்' எனப்படும் பாரம்பரியத் தூய்மைப் பணி பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது. ஆனந்தநிலையம் முதல் தங்க வாசல் வரை உள்ள அனைத்து சன்னதிகளும், மூலிகை கலந்த வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு சாதாரண பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் மூன்று நாட்களுக்கு (டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1) e-DIP குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.89 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 24 லட்சம் பேர் பதிவு செய்திருந்த இந்த முறையில் டோக்கன் பெற்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குச் சரியாக வந்தால் இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே எவ்வித சிரமமும் இன்றி தரிசனம் செய்ய முடியும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

குலுக்கல் முறையில் டோக்கன் கிடைக்காத பக்தர்கள், ஜனவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையிலான கடைசி ஏழு நாட்களில் நேரடியாகத் திருமலைக்கு வந்து சர்வ தரிசன வரிசைகள் (Free Darshan) மூலம் சொர்க்கவாசலைக் கடக்கலாம். இதே காலகட்டத்தில், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்காக தினமும் 15,000 சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகளும் (ரூ.300), 1,500 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், ஜனவரி 6 முதல் 8 வரையிலான தேதிகளில் திருப்பதி உள்ளூர்வாசிகளுக்கு எனத் தனியாகத் தினமும் 5,000 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால், கூட்ட நெரிசலைக் தவிர்க்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் 3,500 காவல்துறையினரும், 1,150 தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் திருமலை முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். மேலும், இந்த 10 நாட்களிலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்புத் தரிசன வரிசைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தரிசனத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர், தங்குமிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளைத் தயார் செய்ய அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாகத் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பக்தர்கள் அனைவரும் தேவஸ்தானம் அறிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் ஏழுமலையானைத் தரிசித்து அருள் பெற வேண்டும் என்று நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.