யானை குளியலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது விபரீதம்- யானை விழுந்து கணவன் கண்முன்னே மனைவி பலி

 
s

கர்நாடகவில் கோடைச்சுற்றுலா சென்றிருந்த போது காவிரியாற்றில் நீராடிக்கொண்டிருந்த யானையின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்க முயன்ற பெரம்பலூரை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தனது 3 வயது குழந்தை மற்றும் கணவரின் கண்முன்னே யானைகளுக்கிடையே சிக்கி துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அவர்களது உறவினர்களை பதறச் செய்துள்ளது.  

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் வசிக்கும் செங்கலை (லேட்) - மணிமேகலை தம்பதியினரின்  மகள் ஜுன்ஸி (33), இவர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வசித்து வந்த BE பட்டதாரியான ஜோயல் சைமன் ஃபிராங்ளின் என்ற கிறிஸ்த்துவ இளைஞரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 6-ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜொயல் சைமன் சென்னை பல்லாவரத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். தற்போது கோடை காலம் என்பதால் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சுற்றுலா சென்ற ஜோயல், வீடு திரும்பும் போது நேற்று குடகு பகுதியில் துபாரே யானைகள் முகாமிற்கு சென்றுள்ளார்.

அப்போது காவிரியாற்றில் யானைகள் நீராடி கொண்டிருப்பதை பார்த்து ரசித்த ஜீன்ஸி யானைகள் அருகே நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது மார்த்தாண்டன் என்ற யானை மண்டியிட்டு அமர்ந்து நீராடிய போது அதன் மீது சாய்ந்து நின்று புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அருகில் நீராடிக் கொண்டிருந்த கஞ்சன் என்ற மற்றொரு யானை பாகனின் கட்டுப்பாட்டை மீறி திடீரென ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்து மார்த்தாண்டன் யானையை தாக்க தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் யானையின் அருகே பக்கவாட்டில் சாய்ந்து அமர்ந்திருந்த ஜுன்ஸி யானையின் அடியில் சிக்கியுள்ளார். கஞ்சன் யானை ஆக்ரோஷமாக தாக்கியதால் பாகனும் அவரது கணவரும் ஜூன்ஸீயை உடனடியாக  மீட்க  முடியாது போராடியுள்ளனர்.

இந்த காட்சியை சுற்றுலாபயணிகள் சிலர் செல்போனில்படம் பிடித்து பசமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின், இறுதியாக யானைகள் சண்டையிட்டு ஓய்ந்த நிலையில் மீட்டப்பட்ட ஜூன்ஸியை கூர்க் நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தனது கண்முன்னேயே மனைவி துடிதுடித்து உயிரிழந்த சம்பவத்தால் கதறி அழுத ஜோயல் சைமன் தனது உறவினர்களுக்கு தகவல் தந்துள்ளார். இதையடுத்து ஜோயலிடம் புகார் பெற்ற கர்நாடக போலீஸாரின் உதவியுடன் உடற்கூறு ஆய்வை முடித்த அரசு மருத்துவர்கள்  ஜூன்ஸியின் உறவினர்களிடம் உடலை ஒப்படைத்துள்ளனர். இதனிடையே இறந்த ஜீன்ஸியின் கண்களை தானமாக வழங்க விரும்புவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்ததையடுத்து அவரது கண்கள் தானமாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை அதை தானமாக பெற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஜுன்ஸியின்  உடலை பெற்ற அவரது குடும்பத்தார் இன்று காலை 4 மணிக்கு பெரம்பலூர் நகருக்கு கொண்டு வந்துள்ளனர். கிறிஸ்த்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் பெரம்பலூர்-ஆலம்பாடி  சாலையிலுள்ள ஜோயல் குடும்பத்தார்க்கு சொந்தமான சர்ச்சில் ஜுன்ஸியின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்துள்ளனர். மதச்சம்பிரதாய சடங்குகள் நிறைவுற்ற பிறகு மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.