6 பேர் உயிரிழப்பு எதிரொலி...! திருப்பதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், திருப்பதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் ஒருவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து திருப்பதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திக்க வருகிறார். கூட்டம் அதிகமாக இருந்ததால் முன்கூட்டியே டோக்கன் வழங்கியதாக பக்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். டோக்கன் வாங்க முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.