பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்ய வரும் 22ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் நடவு இப்போது தான் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை காப்பீடு செய்வதற்கான கானக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இதுவரை ஏறக்குறைய 70% உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சம்பா மற்றும் தாளடி பயிர்க்காப்பீட்டுக்கு தேவையான சான்றுகளை தாக்கல் செய்வதில் புதிய நடைமுறைகள், சான்றுகள் வழங்குவதில் ஏற்படும் தாமதம், தீபஒளி தொடர் விடுமுறை ஆகியவற்றின் காரணமாகவும் சம்பா பயிர்க்காப்பீடு தாமதமாகிறது. காவிரியில் நீர்வரத்து இல்லாததால் நடப்பாண்டு சம்பா சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், தொடர் விடுமுறை, சர்வர் பிரச்சனை போன்ற காரணங்களால் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பயிர் காப்பீடு செய்ய தவறிய விவசாயிகள் 22ம் தேதி வரை செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்துள்ளது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் தமிழ்நாடு அரசு எழுதியிருந்தது.