பெண்கள், குழந்தைகள் என கூடப் பாராமல் பூர்வக்குடி மக்களை வெளியேற்றியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: சீமான்!

 
1

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்தாறு மற்றும் வேப்பமரத்து கொம்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, குறைந்தது ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்தனர். அவர்களை வனத்துறையினர் அண்மையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே உள்ள மணல் திட்டு, எடத்திட்டு, வேப்பமரத்து கோம்பு, ஏமனூர், ஒட்டனூர் கிராமங்களில் பூர்வக்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வனப்பகுதி நிலத்தில் குடியிருப்பதாகக் கூறி வனத்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்.

திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்பகுதி மக்கள் வனத்துறையால் தொடர் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளனர். இப்பகுதியில் வாழும் மக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் என அனைவரையும் வனத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் குடியேறும்படி வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அம்மக்களுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக வனத்துறையின் அராஜகப்போக்கு தொடர்ந்து அதிரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் வன உயர் அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியரையும் பல முறை சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளனர். கடந்த மாதம் பென்னாகரம் அருகே உள்ள ஏமனூர், ஒட்டனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களை வனத்துறையினர் வெளியேறச் சொன்னதால், அவர்கள் மக்களவை தேர்தலைப் புறக்கணித்துத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

இந்த நிலையில், இன்று ஒக்கேனக்கல் அருகே உள்ள மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், அங்கிருந்த வீடுகளின் கூரையைப் பிரித்து எறிந்தும், சுவர்களை இடித்துத் தள்ளியும், வீடுகளில் சேகரித்து வைத்திருந்த உணவுப்பொருட்களைத் தரையில் கொட்டியும், மக்களின் உடைமைகளைத் தூக்கி எறிந்தும், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பாராமல், வலுக்கட்டாயமாக வெளியேற்றி பெரும் அராஜகத்தோடு செயல்பட்டுள்ளனர். இதில் பல பெண்களுக்குக் காயங்களும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் மீன்களும், காடுகளில் தேனும் சேகரித்து பல நூறு ஆண்டுகளாக வனத்தோடு இணைந்து வாழ்ந்து வந்த மக்களை, திடீரென வனத்தில் இருந்து விரட்டி அவர்களின் வாழ்வியலுக்குத் தொடர்பே இல்லாத நிலப்பகுதிக்கு விரட்டுவது சொந்த நாட்டிலே ஏதிலிகளாக மாற்றப்படும் சூழலுக்கு தான் அவர்களை இட்டுச்செல்லும். மேலும், வனங்களில் வாழும் பூர்வகுடி மக்களின் மரபியல் அறிவை பயன்படுத்தினால் மட்டுமே வனத்தையும், வன உயிர்களையும் பாதுகாக்க முடியும் எனபதை வனத்துறை உணர வேண்டும். தி

ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் சென்ற பத்தாண்டுகளில் பழங்குடிகளுக்கு எதிராகக் கொண்டு வந்த வனத்திருத்த சட்டத்தினால் பல லட்சக்கணக்கான பழங்குடிகள் தங்களின் வனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆளும் திமுக அரசும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வண்ணம், வனத்தில் வாழும் பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும், இந்த வெளியேற்ற நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உரிய மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் எனவும், இடித்த பூர்வக்குடி மக்களின் வீடுகளை சீரமைத்துத் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.