சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 தொழிலாளர்கள் படுகாயம்!!

 
fire accident

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில்  இயங்கி வந்த  பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் வழிவிடும் முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு தலா 3 லட்சமும்,  காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

fire

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று  வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

fire accident

தமிழகத்தில் பட்டாசு ஆலை விபத்து என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துகளை தடுக்க உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளைகண்காணித்து பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.