நெல்லையப்பர் கோயில் விமானம் அருகே செருப்புடன் நின்ற செயல் அலுவலர்! வைரலாகும் புகைப்படம்
நெல்லையில் கோயில் மூலவர் விமானம் அருகே காலணியுடன் செயல் அலுவலர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் செயல் அலுவலராக தங்க சுதா என்பவர் பணியாற்றுகிறார். இந்நிலையில் தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து செயல் அலுவலர் தங்க சுதா கோயில் மூலவர் விமானம் அருகே காலில் காலணி அணிந்தபடி நிற்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் தங்க சுதாவிடம் கேட்ட பொழுது, “அது தற்பொழுது எடுத்த புகைப்படம் இல்லை. மார்ச் 16ஆம் தேதி கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த புகைப்படம் கோவிலில் திருப்பணி நடந்த பொழுது எடுக்கப்பட்டது, கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் வாகனங்கள் பாலாலயங்கள் செய்யப்பட்டு வேலைகள் நடந்தது. இந்த புகைப்படம் எடுக்கும் போது கோவில் மேல் தளத்தில் தளம் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. இரவு பகல் பாராது கோவில் திருப்பணிகள் நடந்த நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டோம். மதிய வேளையில் கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்த போது வெயில் அதிகமாக இருந்த காரணத்தினால் வேலை தடைபடக் கூடாது என்பதற்காக அனைத்து பணியாளர்களுடன் சேர்ந்து நானும் காலணி அணியும் நிலை ஏற்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது தவறாக கருதப்பட்டால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அறங்காவலர் குழுவினர் கோவிலில் பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதை நான் தட்டிக் கேட்டதால் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விதமாக சமூக வலைதளங்களில் முன்பு எடுத்த புகைப்படத்தை தற்பொழுது பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே அறங்காவலர் குழு மீது மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். தற்பொழுதும் புகார் அளிக்க இருக்கிறேன்” என்றார்.


