தூத்துக்குடியில் பரபரப்பு..! 10 மாத குழந்தை, மனைவி மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..!
தூத்துக்குடி, சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதி (24). இவரும்,சுரேஷ் குமார் (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 10 மாதக் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவர்கள் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை திடீரென ரேவதி வசிக்கும் வீட்டிற்கு வந்த சுரேஷ் குமார், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பாட்டிலில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோலை ரேவதி, அவரது தாயார் மற்றும் 10 மாத குழந்தை ஆகியோரின் மீது ஊற்றி அவர் தீ வைக்க முயன்றுள்ளார். சாமர்த்தியமாகச் செயல்பட்ட ரேவதியும், அவரது தாயாரும், உடனடியாக வீட்டின் கதவைப் பூட்டிக் கொண்டு, குழந்தையுடன் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர்.
இதில் மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், ரேவதி வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி, அவற்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதில் வாகனங்கள் இரண்டும் முழுமையாக எரிந்து நாசமாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை அவர்கள் கைது செய்தனர்.


