தமிழக அரசியலில் பரபரப்பு..! நாங்கள் த.வெ.க. அரசுக்கு அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான்-இந்திய கம்யூனிஸ்டு எம்.பி..!!
திருப்பூர் எம்.பி. சுப்பராயன் நேற்று நெல்லை யில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் த.வெ.க ஆட்சிக்கு வந்த பின்னர் தனது பொருளாதார கொள்கை குறித்து இதுவரை தெளிவாக விளக்கவில்லை. கவர்னர் உரையிலும் சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை. அவரது உரை, வெற்று ஆவணமாக இருந்தது. தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் குறித்து புதிய அரசு இதுவரை வாய் திறக்க வில்லை.
தமிழக பட்ஜெட்டில் தனியார்மயம் தலைதூக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது மின்பற்றாக்குறை காணப்படுகிறது. மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்குவதாக கூறி தனியாருக்கு அதிக லாபம் வழங்கப்படுகிறது. நாங்கள் புதிய அரசுக்கு அளித்த ஆதரவு கொள்கை அடிப்படையிலானது அல்ல.
தமிழக வெற்றிக்கழக அரசுக்கு நாங்கள் அளித்துள்ள ஆதரவு தற்காலிகமானது தான். எப்போதும் இந்த ஆதரவு நீடிக்கும் என்று கூறுவதற்கில்லை. தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு இடதுசாரிகளின் ஆதரவு இல்லை. இந்த தேர்தலில் பணபலமும், அதிகாரபலமும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு ஆலோசனை கூட்டங் களை நடத்தி, எதிர்கால அரசியல் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கான செயல் திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட இடைத் தேர்தலை மட்டும் அடிப்படையாக கொண்டது அல்ல. நீண்டகால அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

