சௌமியா அன்புமணியின் பேரவை செயல்பாட்டிற்கு "Excellent" பாராட்டு: கமல்ஹாசனின் எக்ஸ் தளப் பதிவு வைரல்!
சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை டாஸ்மாக் மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது:-
பெண்களின் சுதந்திரத்தையும், குடும்பங்களின் பொருளாதார நிலையையும் டாஸ்மாக் பாதிக்கிறது. 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் ரூ.789.95 கோடிக்கும், 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரூ.725.56 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளின் கல்வி, மகள்களின் திருமணம், வீடு கட்டுதல் போன்றவற்றுக்காக குடும்பங்கள் சேமிக்க வேண்டிய பணம் மதுபானத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே, மதுவிலக்கை குறைந்தபட்சம் கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும்.
மேலும், மதுவிலக்குக்காக பா.ம.க. மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். தவெக அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலேயே 717 மதுக்கடைகளை மூடுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டது மிகப்பெரிய சாதனை என்றும் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பேரவை துணைசபாநாயகர் ரவிசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவர் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக பேசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில், துணை சபாநாயகர் சௌமியா அன்புமணியை பாராட்டிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அவரது சட்டப்பேரவை செயல்பாடுகளை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் தள பதிவில், "Excellent" சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சௌமியா அன்புமணி அவர்களைப் பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சௌமியா அன்புமணி,குறுகிய காலத்திலேயே பல்வேறு மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் அழுத்தமாக முன்வைத்து வருவது கவனம் பெற்றுள்ளது. இதனிடையே, ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் அவரது செயல்பாடுகள் குறித்து பாராட்டுகள் வெளிவருவது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன். https://t.co/21vTSC7lcp
— Kamal Haasan (@ikamalhaasan) September 1, 2026

