தேர்வில் தோல்வி: குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துகொள்க - பெற்றோர்களுக்கு அன்பில் மகேஷ் வேண்டுகோள்..

 
anbil magesh anbil magesh

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம்வகுப்பு தேர்ச்சி சதவீதம் 91.39 ஆகும்.  இதில் மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66 ஆகவும்,  மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16% ஆக உள்ளது. அதேபோல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 86.99 சதவீதமும், மாணவிகள் 94.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

result

இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவு குறித்து கூறியதாவது, “ தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம். தோல்வியடைந்தவர்கள் விரைவில் துணை தேர்வுகளை எழுதி நடப்பாண்டே உயர்கல்விக்கு செல்ல முடியும்.  35 மதிப்பெண்கள் பெற்றாலும் நம் பிள்ளைதான், 100 மதிப்பெண்கள் பெற்றாலும் நம் பிள்ளை தான்.

anbil

எனவே பெற்றோர்கள் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா பிள்ளைகளும் நமது பிள்ளைகள்தான் எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் துணைத் தேர்வு நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களையும் துணை தேர்வில் கலந்து கொள்ள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.  அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து கல்வி தொடர ஏற்பாடு செய்வோம். வடமாவட்டங்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 80,000க்கும் மேலான மாணவர்கள் அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம்” என்று தெரிவித்தார்.