தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம்- தங்கம் தென்னரசு பரபரப்பு தகவல்

 
தங்க தென்னரசு செய்தியாளர் சந்திப்பு

மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதல் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில், “மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கனிம வளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா- 2026, அரசியலமைப்பு உறுதி செய்யும் நிதிக் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம் எவ்வித வரி வருவாயும் அந்த மாநிலம் ஈட்ட முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ள இந்த மசோதாவானது, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் II-ன் 50வது பிரிவின் கீழ், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியிலிருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை மறுக்கிறது.

வருவாய் ஈட்டும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும். மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும். சீர்திருத்தம் என்ற பெயரில் மாநிலங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.