"தவெக ஆட்சி முடியும்போது கடன் ரூ.20 லட்சம் கோடியா உயரும்"- தங்கம் தென்னரசு
தவெக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் கடன் சுமையை திமுகதான் ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டின் போது நிதியமைச்சர் ஏற்படுத்தியிருந்தார். தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன். இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் சுமை குறையாது என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ரூ.1.22 லட்சம் கோடி இந்த ஆண்டு நிகர கடன் வாங்கப்பட உள்ளது. லீக்கேஜ் எல்லாம் அடைத்து மாநிலத்தின் சொந்த வருவாயை கூட்டுவோம் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், பட்ஜெட்டில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திமுக அரசு மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை விட, இந்த அரசு மோசமாக செயல்படுகிறது.
மூலதனச் செலவுகளையே திமுக செய்யாததைப் போல ஒரு தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டில் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் இருந்து தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவில் சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.ட்தவெக அரசு ஆட்சி அமைத்த 3 மாதங்களிலேயே ரூ.22,000 கோடியை கடனாக வாங்கியுள்ள நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். தி.மு.க ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை (revenue deficit) ரூ.48,699 கோடியாக இருந்தது. அது இன்றைக்கு த.வெ.க ஆட்சியில் ரூ.55,775 கோடியாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக பட்ஜெட்டில் தந்துள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை” என்றார்.

